கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (28.07.2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைக…

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (28.07.2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட விநாயகபுரம் பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு, கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்கள் ......ஒரு குடும்பத்திற்கு கல்வீடு எவ்வளவு அவசியமோ அதேபோன்று ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கும் தரமான வீதி அவசியமானது எனக் குறிப்பிட்டார். கிராம மக்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தவும், கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் அன்றாட தேவைகளுக்காக நகரங்களை எளிதில் சென்றடையவும் இவ்வீதி முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மண் மற்றும் கிரவல் வீதியாக காணப்பட்ட இவ்வீதி, தற்போது காப்பெட் வீதியாக மாற்றப்படுவதன் மூலம் கிராமத்தின் தோற்றமும் பொருளாதாரச் செயற்பாடுகளும் மேம்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்த அவர், வீதி அபிவிருத்திப் பணிகளை தற்போது முன்னெடுத்து வரும் நீர்ப்பாசனத் திணைக்களமும் கரைச்சி பிரதேச சபையும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமான வீதியை அமைத்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். மேலும், வீதிப் பணிகளின் தரத்தை உறுதிப்படுத்துவதில் கிராம மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னர் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், இன்னும் புனரமைக்கப்பட வேண்டிய மீதமுள்ள வீதிப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளதையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.