கிழக்குக் கடற்பரப்புகளில் நீண்டகால கடல் பாதுகாப்பையும் நிலையான சுற்றுலா அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கடல் பிரிவு விரிவான பவளப்பாறை ஆய்வை மேற்கொண்டுள்ளது. காயங்கேணி கடல் சரணாலயம் மற்றும் அதனை அண்மித்த பாசிகுடா கடலோரப் பகுதிகளில்…
கிழக்குக் கடற்பரப்புகளில் நீண்டகால கடல் பாதுகாப்பையும் நிலையான சுற்றுலா அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கடல் பிரிவு விரிவான பவளப்பாறை ஆய்வை மேற்கொண்டுள்ளது.
காயங்கேணி கடல் சரணாலயம் மற்றும் அதனை அண்மித்த பாசிகுடா கடலோரப் பகுதிகளில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம், பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடற்பகுதிகளில் காணப்படும் பவளப்பாறை சூழலமைப்புகளின் தற்போதைய நிலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்கால பாதுகாப்பு மற்றும் பவளப்பாறை மீளமைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அறிவியல் தரவுகளைப் பெறுவதும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பவளங்கள் பாதுகாக்கப்பட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல் உயிரினங்களின் வாழ்விடம், இனப்பெருக்கம் மற்றும் உணவுத் தளங்களாக விளங்கும் பவளப்பாறைகள், கடற்கரை பாதுகாப்பு, மீன்பிடித் துறை மற்றும் சுற்றுலாத்துறையின் நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்கால கடல் பாதுகாப்பு மற்றும் வள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நிலையான சுற்றுலா அபிவிருத்திக்கும் வழிகாட்டியாக அமையும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.












