கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இயங்கி வரும் பிரித்தானிய-பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான 'பெரென்கோ', அப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்குப் பல தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ள…

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இயங்கி வரும் பிரித்தானிய-பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான 'பெரென்கோ', அப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் மக்களுக்குப் பல தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள 'முவாண்டா' பகுதியில் பெரென்கோ நிறுவனம் மேற்கொண்டு வரும் தரைவழி மற்றும் கடலோர எண்ணெய் அகழ்வுப் பணிகளால் இந்த மாசுபாடு ஏற்பட்டுள்ளது.இயற்கை எரிவாயு குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் இயற்கை எரிவாயுவை எரிப்பதால் அப்பகுதியின் காற்று மற்றும் மண்ணின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தணிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிலத்தடி நீர் எந்த அளவுக்கு நஞ்சாகியுள்ளது என்பதைக் கண்டறிய நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில் 'மனித உரிமை கண்காணிப்பு' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பெரென்கோ நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளூர் மக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கொங்கோ ஹைட்ரோகார்பன் அமைச்சகம் இந்தத் தணிக்கை விவரங்களை வெளியிட்டுள்ளது.குற்றச்சாட்டு

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பெரென்கோ நிறுவனம், காற்று, நீர் மற்றும் மண் மாசுபாடு குறித்த முறைப்பாடுகளுக்குத் தகுந்த தொழில்நுட்பச் சான்றுகள் எதுவும் இல்லை என்றும், கொங்கோ அரசின் இறுதித் தணிக்கை அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் இத்தகைய முடிவுகளுக்கு வருவது அவசரமானது என்றும் தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தணிக்கை, சர்வதேச ஆலோசனைக் குழு மற்றும் கொங்கோ அரசுப் பணிக்குழுவால் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.

மாசுபாடு உறுதி செய்யப்படும் பட்சத்தில், கொங்கோ சட்டங்களின்படி உரிய நஷ்டஈடு, சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் மற்றும் பெரென்கோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.