ஆக்ராவின் உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் வளாகத்தில் சுற்றுலா வந்த தென் கொரியப் பெண் குரங்கு கடித்துக் குதறப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கிம் (25 வயது) என்ற இளம்பெண், தனது ஆண் நண்பருடன் வரலாற்று சின்னங்களைச் சுற்றி…
ஆக்ராவின் உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் வளாகத்தில் சுற்றுலா வந்த தென் கொரியப் பெண் குரங்கு கடித்துக் குதறப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த கிம் (25 வயது) என்ற இளம்பெண், தனது ஆண் நண்பருடன் வரலாற்று சின்னங்களைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளார். தாஜ்மகாலின் கிழக்கு நுழைவாயில் அருகே காலணி உறைகளை வாங்குவதற்காக அவரது நண்பர் சென்றுகொண்டிருந்தபோது, தனியாக நின்றுகொண்டிருந்த கிம்மை திடீரென பாய்ந்துவந்த குரங்கு வலது கையில் கடித்துக் குதறியது.
கடுமையான வலியால் துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறவே, அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும் தொல்லியல் துறை ஊழியர்களும் அவரை மீட்டு முதலுதவி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளிக்கப்பட்டும் ஒரு மணி நேரமாக வரவில்லை. இதனால் ரத்தக்கசிவு அதிகமாகவே, பேட்டரி கார் மூலம் உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாஜ்மகாலைச் சுற்றிப்பார்க்கும் கனவோடு வந்த வெளிநாட்டுத் தம்பதியினர், இந்தத் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்து போய் பாதியிலேயே இந்தியப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். தாஜ்மகால் வளாகத்தில் அதிகரித்து வரும் குரங்குத் தொல்லையால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.












