இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கம், ஏனைய அரச ஊழியர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கம், ஏனைய அரச ஊழியர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தைக் கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
" இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் பணியாற்றுபவர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியென்றால் மற்றைய அரச ஊழியர்கள் எத்தனை வேளை சாப்பிடுகின்றனர்? என்ன சாப்பிடுகின்றனர் என்று கேட்கின்றேன். அதேபோன்று, சுங்கத் திணைக்களத்தையும் கவனிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
நீங்கள் மற்றவர்களைச் சிறையில் போடுவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை மகிழ்விக்கும் பயணத்திற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். 90 சதவீதமான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கே வாக்களித்துள்ளனர். ஆனால், ஒரு தரப்புக்குக் கோழி இறைச்சி, மற்றைய தரப்பினருக்கு எலும்புத் துண்டுகள் வழங்குவது போன்றே இந்தச் செயற்பாடுகள் உள்ளன.
மகிியங்கனையில் 36 பாடசாலைகளில் பதில் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட 2,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களால் சேவை செய்ய முடியாமல் உள்ளது. இவ்வாறுதான் அரச ஊழியர்களின் தற்போதைய நிலைமை இருக்கின்றது. இதேவேளை, வைத்தியர்களின் ஓய்வு வயதை அதிகரித்தால் பிரச்சினையில்லை. ஆனால், நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது சிக்கலானது. நீதிபதிகள் வழக்குகள் குவிந்து கிடப்பதால் தலைவலியில் இருக்கின்றனர். அவர்களுக்கு 60 அல்ல, 55 வயதிலேயே ஓய்வு வழங்க வேண்டும். அவர்களை ஓய்வுபெறச் சந்தர்ப்பம் வழங்கி, அவர்களுக்கான சலுகைகளை அளித்து, அவர்கள் சுதந்திரமாகச் செல்ல இடமளிக்க வேண்டும்" என்றார்.












