நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடு…
நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், வெள்ள அபாயம் காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (02) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பேராதனை ‘களு பாலம்’ அருகே நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், சில கட்டுமானப் பொருட்களும் உபகரணங்களும் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) மதியம் 12.30 மணி முதல் நாளை (04) அதிகாலை 12.30 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத்த, யடிநுவர, கங்க இஹல கோரளை, பாஸ்பாகே கோரளை மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கு பொருந்தும்.
மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மற்றும் தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் மழை தொடரும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







-558349_850x460.jpg)
-558350_850x460.jpg)



