மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மன்னார் புனித…

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர் நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த ஒருவரே அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.பொறுப்பு வழங்கப்பட்ட அதிபர்அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில் உள்ளனர்.இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், "டி லா சால்" (De La Salle) கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள் இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.தகுதிக்கு ஏற்ப நியமனம் தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும் தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக் கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது மிகுந்த அநீதியாகும். எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப் போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும். நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப் பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விஷயத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.