ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்…

ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் கூட்டணி தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளிக்கையில், “ கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றத்திலே என்னை கண்டு “பேசலாமா?” என்று கேட்டு, "நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த முயற்சியிலே நானும், அதாவது தமிழ் தேசிய பேரவையும், வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்" என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார். அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன்.

அந்த இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனனையும் அந்த இடத்திற்கு அழைத்து, "நான் கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்" என்ற கருத்தை சொல்லியிருந்தார்.

மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய குழுவுக்கு அதனை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு அதன் மூலமாக தான் தெரிவிக்கப்படும்.

ஏனென்றால் நாங்கள் அதில் இதுவரைக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.

ஆகவே நாங்கள் முதல் அதில் கலந்து கொள்வதா இல்லையா? என்று முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைந்த பின்னரே இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.