மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார த…

மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபராகல மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயபுரம்’ வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மலைநாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பல தசாப்தங்கள் தேவைப்படலாம் என தெரிவித்த ஜனாதிபதி, தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

மண்சரிவுகள், இயற்கை நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகளில் வண்டல் படிந்து மாசடைதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை நேரில் அவதானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்த அதிகாரசபைக்கு தேவையான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மலையகத் தமிழர்கள் முழுமையான உரிமைகளுடன் நாட்டின் சம குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு எதிர்நோக்கும் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.