இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.இன்று(28.08.2026) யாழ்ப்பாணத்தில் வடக்கு - கிழக்கின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும…
இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.இன்று(28.08.2026) யாழ்ப்பாணத்தில் வடக்கு - கிழக்கின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர்.ஒன்றுபட்ட அமைப்பு உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையிலும், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகவும் தமது பூர்வீக காணிகளை இழந்துள்ள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் காணி உரிமைக்காக எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வகையில் செயற்படுவதற்கான முக்கிய கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது. காணிகளை இழந்த மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான பொதுவான அமைப்பாகவும் செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “ஒன்றுபட்ட அமைப்பு” ஊடாக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய 7 மாவட்டங்களை சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன்போது காணி அபகரிப்பு, காணிகளுக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான தடைகள், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் பொதுமக்களின் பாரம்பரிய காணிகள் ஆக்கிரமிக்கப்படுதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை இழந்த மக்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.காணி விவகாரம்குறிப்பாக, பாதுகாப்புத் தேவைகள் என்ற காரணத்தை முன்வைத்து நீண்டகாலமாக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.“ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.












