மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக 16 சுகாதாரத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது தொடர்பில் துரித விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் அவசர…
மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக 16 சுகாதாரத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது தொடர்பில் துரித விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த சந்திப்பில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜாவும் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு கடந்த 6ஆம் திகதி நடைபெற்றபோது, தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதாரத் தொண்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், இந்த விடயம் ஊடகங்கள் மூலம் தமது கவனத்துக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநகர சபை உறுப்பினர்களுக்கே தெரியாமல் இவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதில் ஏதேனும் முறைகேடு அல்லது அதிகார தலையீடு இடம்பெற்றுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த வேலைவாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சையில் பங்கேற்றதுடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஐந்து பாடங்களில் சித்தியடைந்திருந்த போதிலும் அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
அவ்வாறான நிலையில், அவரைவிட நியமிக்கப்பட்ட 16 பேரும் எவ்வாறு தகுதியுடையவர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள் அல்லது இதில் அதிகார தலையீடு இடம்பெற்றுள்ளதா என்பதை ஆளுநர் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நியமனங்கள் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டிருந்தால் அவற்றை இரத்து செய்து, மாநகர சபைக்கு உண்மையில் சுகாதாரத் தொண்டர்கள் தேவைப்படுமாயின், பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிவித்தல் வெளியிட்டு, முறையான விண்ணப்பம் மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட பலர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாகவும், எனவே இவ்வாறான வேலைவாய்ப்புகளுக்கு வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.












