ரொசேரியன் லெம்பட் மன்னார் பெருநிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் வழிபாடுகளுக்கான சட்டதிட்டங்களுக்கு ஒப்பாக, மடு விழாவைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசின் உதவி எமக்குத் தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம். அரச மற்…

ரொசேரியன் லெம்பட்

மன்னார் பெருநிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் வழிபாடுகளுக்கான சட்டதிட்டங்களுக்கு ஒப்பாக, மடு விழாவைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசின் உதவி எமக்குத் தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து, அதற்கமைய இந்த மடு விழாவுக்கான ஆயத்தங்களைப் பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்து வருகின்றன. இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியம்.

சுகாதாரம், மருத்துவம், சாரணர் சேவை, செயின்ட் ஜோன் ஆம்புலன்ஸ் (St. John Ambulance), கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், மின்சாரம், உணவு மற்றும் கடைகள், போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்கள் போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியமானவையாகும்.

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும்; மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது, மாற்றவும் முடியாது. சில சட்டதிட்டங்கள் மடு திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கின்றன. இந்தச் சட்டதிட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கிறோம். இந்தப் பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் யாவரும் ஒருமித்துச் செயற்படுத்தும்போது, வழிபாடுகளைச் சிறந்த முறையில் செயல்படுத்த முடியும். அதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, இங்கு கழிவு அகற்றுதல், பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகின்றன. சில கடைகள் இந்த மடுத் திருத்தலப் பகுதிக்குள் வர முடியாது. ஐஸ்கிறீம் வியாபாரம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள், ஊதுகுழல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், மடு எல்லைப் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறானவைகளால் இங்கு வழிபாட்டுக்குத் தடைகள் காணப்படுகின்றன. இவ்வாறு சில விடயங்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மடு வீதியில் கடைகள் அமைப்பதைத் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அங்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இப்படியான விடயங்களுக்கு உதவிகள் உங்களிடமிருந்து அதிகமாகத் தேவைப்படுகிறது. இதற்கு எதிர்ப்புகளும் விவாதங்களும் எம்மிடம் இருக்கக் கூடாது.

ஆகவே, இங்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், பொலிஸார், பாதுகாப்புப் படைகள் இருக்கின்றீர்கள். எங்களுக்குத் தேவையானது, இங்கு வருகை தரும் பக்தர்களை ஒன்றுசேர்த்து, 15ஆம் திகதி பெருவிழாவைப் பக்தியுடன் நிறைவேற்றி, மக்கள் தங்கள் உள்ளத்திலுள்ள வேண்டுதலை நல்ல மனதுடன் அன்னையிடம் சமர்ப்பித்துத் திருப்தியான முறையில் அவர்கள் திரும்பிச் செல்லும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.

வருடத்திற்கு வருடம் புதிய புதிய பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுவதை நாம் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. முன்னைய காலத்தில் மடு வீதி, பண்டிவிரிச்சான், தம்பனை இவைகளும் மடுத் திருத்தலத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இங்கு மக்களை நாங்கள் குடியேற்றினோம். இந்தப் பகுதிக்குள் மதுபானம், இறைச்சி கொண்டுவர முடியாது. இந்தப் பகுதிக்குள் தொற்றுநோய்கள் உருவாகக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவைகள் இங்கு மட்டுமல்ல, மடு எல்லைக்கப்பாலும் இவைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மடுத் திருப்பததிக்கு மக்கள் வருகை தரும்போது இறை உணர்வு இருக்க வேண்டும்.

அதை விடுத்துச் சந்தைக்குச் செல்லும் உணர்வாக இருக்கக் கூடாது. மடு ஆலய வீதியில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் உண்டு; இவற்றைத் தடுக்க உங்களால் முடியும். அதற்கேற்ற சட்டமும் உண்டு. ஆகவே, நாளுக்கு நாள் மாறிவரும் விடயங்களால் நாம் மடுவை மாற்றிக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.