விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியான மோசடிகள் மற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுவரும் சந்தேகநபர் ஒருவரைக் அடையாளம் கண்டு கைது செய்வதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியைக் பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3, 2026 அன்று கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட…

விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியான மோசடிகள் மற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுவரும் சந்தேகநபர் ஒருவரைக் அடையாளம் கண்டு கைது செய்வதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியைக் பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 3, 2026 அன்று கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட விடுதி ஒன்றுக்கு வருகை தந்த சந்தேகநபர், தன்னை ஒரு தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இரவு விருந்து உபசரிப்புக்காக ஒரு குழுவினர் பின்னர் வருவதாகக் கூறி அவர் பெரிய அளவில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபர் பல பொருட்களைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக விடுதி நிர்வாகம் ஸ்லேவ் ஐலண்ட் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதே சந்தேகநபர் சினமன் கார்டன்ஸ், பேலியகொட மற்றும் நுண்கொடை உள்ளிட்ட பிற பொலிஸ்  பிரிவுகளிலும் இது போன்ற திருட்டுச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் அவரது அடையாளம் அல்லது இருப்பிடம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸார் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591561 என்ற எண்ணிலோ அல்லது நிலையத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 011-2433829 ஊடாகவோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விடுதி உரிமையாளர்கள், வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு வரும் பரிச்சயமற்ற நபர்களிடம் கவனமாக இருக்குமாறும், விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.