கனகராஜா சரவணன் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை. இந்நிலையில், "வருடாந்த திருவிழா வேண்டாம், கும்பாபிஷேகம் வேண்டும்" எனக் கோரி ஆலய நிர்வாக சபைக்கு எதிராக திங்கட்கிழமை (27) ஆலயத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில…
கனகராஜா சரவணன்
சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை. இந்நிலையில், "வருடாந்த திருவிழா வேண்டாம், கும்பாபிஷேகம் வேண்டும்" எனக் கோரி ஆலய நிர்வாக சபைக்கு எதிராக திங்கட்கிழமை (27) ஆலயத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், திங்கட்கிழமை (27) அன்று காலையில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு ஒன்றுதிரண்டனர். அப்போது, “இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள்", "வெளிப்படைத் தன்மையைப் பேணி ஒற்றுமையாகச் செயல்படுங்கள்", "வேண்டாம் வேண்டாம் ஊரை ஏமாற்றாதீர்கள்", "முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ?", "கடும் சொல் பேசாத பூட்டிய அறைக்குள் கூட்டமா?", "இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள் மக்களே விழித்தெழு" எனச் சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்து சமய ஆகம விதியின்படி கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும். ஆனால், தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 1965ஆம் ஆண்டு செய்யப்பட்ட பாவைகள் செயல்திறன் அற்ற நிலையில் குரங்குகள் பாய்ந்தும், இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவும் சில சிலைகள் உடைந்தும் தோற்றப்பாடுகளுடனும், மின்சார இணைப்புகளும் பழையனவாகவே இருக்கின்றன. மேலும், ஆலயத்தில் உள்ள வர்ணப்பூச்சுக்களும் பழமை வாய்ந்ததாகக் காட்சியளிப்பதுடன், ஆலயக் கூரையில் உள்ள ஓடுகள் உடைந்தும் பீலிகள் இறந்த நிலையிலும் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி நீர் நிறைந்து பக்தர்கள் நின்று வணங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், "திருவிழா முக்கியமா?" என்பதைப் கடந்த வருடம் பொதுமக்களாகிய நாங்கள் சுட்டிக்காட்டியபோது, காலம் நெருங்கிவிட்டதாகவும் 2025ஆம் ஆண்டில் திருவிழாவை நடத்திவிட்டு, திருவிழா முடிந்ததும் கந்த சஷ்டி விரதம் (சூரன் போர்) நடத்திவிட்டுப் பாலஸ்தாபனம் செய்து ஆலயத்தைப் புனருத்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.
பின்னர் சூரன் போர் முடிந்த பிற்பாடு மழைக்காலமாக இருப்பதால் 2026ஆம் ஆண்டு தைப்பொங்கல் முடிந்த பிற்பாடு பாலஸ்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்வோம் என நிர்வாக சபையினர் கூறினார்கள். ஆனால், இன்று வரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க ஆலய நிர்வாக சபையினர் தவறியமையால், ஆலய நிர்வாக சபைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படைத் தன்மையைப் பேணி ஒற்றுமையாகச் செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ?, கடும் சொல் பேசாத பூட்டிய அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள் மக்களே விழித்தெழு எனச் சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டக்களத்திற்குச் சென்ற மத மற்றும் கலாச்சார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் தேசிய செயலாளர், கலாச்சார உத்தியோகஸ்தர்களிடம் கோரிக்கை அடங்கிய மகஜரை வழங்கினர்.
இதன்போது அமைச்சரின் இணைப்புச் செயலாளர், இதனை ஒரு வாரத்துக்குள் தீர்த்துவைப்பதாகவும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
