அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா…
அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் தாதியர்கள், தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிக்கு வந்தபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளது.
தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.












