இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவி…

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

​.இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர்.ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர் சபேசன், ​ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில் நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின் அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர்.

​போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின் குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசன் அவர்களுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும் பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.