நாட்டில் இன ரீதியான அல்லது மத ரீதியான மோதல்களுக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். எந்தவொரு வடிவத்திலான இன அல்லது மத முரண்பாடுகளும் மீண்டும் உருவாவதற்குத் தமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வலியுறுத்தியுள்ளார். நீண்டகால இன முர…
நாட்டில் இன ரீதியான அல்லது மத ரீதியான மோதல்களுக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். எந்தவொரு வடிவத்திலான இன அல்லது மத முரண்பாடுகளும் மீண்டும் உருவாவதற்குத் தமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வலியுறுத்தியுள்ளார். நீண்டகால இன முரண்பாடுகளால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் வாழும் அனைவரும் இத்தகைய அழிவுகரமான சம்பவங்களால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில் நாட்டில் இன அல்லது மத மோதல்களுக்குச் சிறிதும் இடம் இருக்காது என தாம் உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வெவ்வேறு விதமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகப் கடந்த காலத்தில் நிலவி வந்த சமூகக் கருத்தை மாற்றி, நாட்டின் மறுசீரமைப்பின் அடிப்படை அங்கமாக "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை அரசு உறுதி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களின் முக்கியமான அரசுப் பணிகளையும் பரிவர்த்தனைகளையும் வீடுகளிலிருந்தே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு இன்னும் ஓராண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இது பொதுச்சேவை சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், அரசுச் சேவையை மேலும் ஈர்ப்புமிக்க தொழிலாக மாற்ற உதவும் என தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், மக்களுக்கு விரைவாக நீதி வழங்குவதும், நீதியின் மூலம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். அரசால் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. முடிவுகள் அனைத்தும் அனைத்துக் கோணங்களிலும் ஆராயப்பட்ட பின்னரே எடுக்கப்படும் என்பதால், மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளைச் சிறிய எதிர்ப்புகளுக்காக அரசு திரும்பப் பெறாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இக்கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.












