நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய வீதிப்…

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய தரப் பரிசோதனை

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகளே பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே புதிய தரப் பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகத் தகுதியான தரப் பரிசோதகர்களைப் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக, குறித்த பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டெம்பர் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நடைமுறை முதலில் மூன்று மாத காலத்திற்குப் பயணிகள் பேருந்துகளுக்கு மட்டும் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும். அதன் பின்னர், நாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்தத் தரப் பரிசோதனை முறையைக் கட்டாயமாக்கத் தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.