சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அ…

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர். கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.