நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது மற்றவர்களை விட்டுவிட்டு உங்களை மட்டும் நுளம்புகள் மொய்க்கிறதா? உங்கள் இரத்தம் "இனிப்பாக" இருக்கிறது என்று நண்பர்கள் கேலி செய்கிறார்களா? ஆனால் உண்மை அதுவல்ல! நாம் அறியாமலேயே நமது உடல் வெளியிடும் சில உயிரியல் சமிக்ஞைகள்தான் நுளம்புகளை காந்தம் போல…

நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது மற்றவர்களை விட்டுவிட்டு உங்களை மட்டும் நுளம்புகள் மொய்க்கிறதா? உங்கள் இரத்தம் "இனிப்பாக" இருக்கிறது என்று நண்பர்கள் கேலி செய்கிறார்களா? ஆனால் உண்மை அதுவல்ல! நாம் அறியாமலேயே நமது உடல் வெளியிடும் சில உயிரியல் சமிக்ஞைகள்தான் நுளம்புகளை காந்தம் போல ஈர்க்கின்றன என்று அண்மைய அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நுளம்புகள் சிலரை மட்டும் தேடித் தேடிக் கடிப்பதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான 3 காரணங்களை விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்:

1. மூச்சுக்காற்றில் வரும் கார்பனீரொட்சைட் (CO2) வேட்டை

முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் — மனிதர்களைக் கடிக்கும் நுளம்புகள் அனைத்தும் பெண் நுளம்புகள் மட்டுமே. தங்கள் முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துக்காகவே அவை மனித இரத்தத்தை நாடுகின்றன.

நாம் சுவாசித்து வெளியேற்றும் கார்பனீரொட்சைட் (CO2) வாயுவை சுமார் 10 மீற்றர் (33 அடி) தூரத்திலிருந்தே மோப்பம் பிடிக்கும் அசாத்தியத் திறன் நுளம்புகளுக்கு உண்டு. குழந்தைகள் மற்றும் சிறிய உடலமைப்பு கொண்டவர்களை விட, வேகமாக மூச்சுவிடும் பெரியவர்கள் அதிக கார்பனீரொட்சைட்டை வெளியிடுவதால் நுளம்புகள் அவர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகின்றன.

2. உடல் வெப்பமும் வியர்வை ஈரப்பதமும்

நுளம்புகள் அதிக உடல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நோக்கி ஈர்க்கப்படுபவை.

கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகரித்து, உடல் வெப்பம் மற்றும் மூச்சு அளவு அதிகமாகும். இதன் காரணமாக, மற்ற பெண்களை விட கர்ப்பிணிப் பெண்களைக் கொசுக்கள் கடிக்க 2 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

உடற்பயிற்சி செய்பவர்கள்: உடற்பயிற்சி செய்யும்போது அல்லது செய்து முடித்த உடனேயே உடல் வெப்பமடைவதாலும், வியர்வையுடன் லக்டிக் அமிலம் அதிகமாகச் சுரப்பதாலும் நுளம்புகள் தற்காலிகமாக அவர்களை அதிகம் மொய்க்கும்.

பெரிய உடல்வாகு கொண்டவர்கள்: பொதுவாகவே இவர்களின் உடல் வெப்பமும் கார்பனீரொட்சைட் உற்பத்தியும் அதிகமாக இருப்பதால் கொசுக்களின் இலக்காக மாறுகிறார்கள்.

3. சருமத்தின் தனித்துவமான வாசனை

நுளம்புகள் உங்களை நெருங்க நெருங்க (10 மீற்றருக்கும் குறைவான தூரம்), உங்கள் சருமத்தின் வாசனையை வைத்தே யாரைக் கடிக்க வேண்டும் என்பதை இறுதி செய்கின்றன.

நமது சருமத்தில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பக்றீரியாக்கள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெப்டைடுகளை உடைத்து, காற்றில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களாக (VOCs) மாற்றுகின்றன. மனித சருமத்தில் 500-க்கும் மேற்பட்ட இத்தகைய சேர்மங்கள் உள்ளன.

100 மடங்கு அதிக ஈர்ப்பு: அமெரிக்காவின் றொக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், சருமத்தில் கார்போக்சிலிக் அமிலங்கள் அதிகமாக உள்ளவர்களைக் நுளம்புகள் மற்றவர்களை விட 100 மடங்கு வேகமாகத் தேர்ந்தெடுக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த வாசனை முற்றிலும் மரபணு ரீதியானது என்பதால், நமது வாழ்க்கை முறை மாறினாலும் இந்த ஈர்ப்புத் தன்மை ஆயுள் முழுவதும் மாறுவதில்லை.

எல்லோரையும் கடிக்கிறது... ஆனால் ஏன் உங்களுக்கு மட்டும் தடிக்கிறது?

பலர் தங்களை "நுளம்பு காந்தம்" என்று நினைப்பதற்குக் காரணம், அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினையே ஆகும். நுளம்பு கடித்தவுடன் சிலருக்கு அந்த இடம் வீங்கி, பெரிய தடிப்புகளுடன் வாரக்கணக்கில் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதே நுளம்பு வேறொருவரைக் கடித்தால் ஒரு சிறிய சிவப்பு புள்ளி மட்டுமே தோன்றும்.

எனவே நுளம்பு உங்களைத்தான் அதிகம் கடிக்கிறது என்பதை விட, கடித்தவுடன் உங்கள் உடல் காட்டும் எதிர்வினைதான் உங்களை அப்படி நினைக்க வைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நீங்கள் நுளம்புகளிடம் இருந்து தப்பிக்க என்னதான் வீட்டு வைத்தியம் செய்தாலும், நுளம்புகளின் றேடாரில் இருந்து தப்பிக்க முடியாது என்பதால் பாதுகாப்பாக இருப்பது எப்போதும் நல்லது.