நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, அங்கிலிக்கன் திருச்சபையான இலங்கை திருச்சபை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சரவையிடம் வலியுறுத்தியுள்ளது. நேற்று (30) வெளியிடப்பட்ட அ…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, அங்கிலிக்கன் திருச்சபையான இலங்கை திருச்சபை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சரவையிடம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, பாரபட்சமின்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வழக்கறிஞர் சங்கம், சட்டத்துறை வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் முன்வைத்துள்ள கவலைகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவ்வாறு இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் என அரசாங்கம் கூறினாலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள நீதிபதி பதவிகளை நிரப்பாத நிலை அந்த விளக்கத்தை பலவீனப்படுத்துவதாக திருச்சபை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த தேர்தலின்போது வாக்குறுதியளிக்கப்பட்ட முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்காமல், பொதுமக்கள் கலந்தாலோசனை இல்லாத ஒரு விடயத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவருவது அரசியலமைப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று அதிகாரப் பிரிவுகளும் இந்தத் திருத்தத்தின் உண்மையான நோக்கத்தை தங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் ஆராய வேண்டும் என்றும், நிறைவேற்று அதிகாரத்தை கண்காணிப்பதே சட்டமன்றத்தின் முதன்மை பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு ஆயர் பேராயர் தி ரைட் ரெவரண்ட் துஷாந்த ரொட்ரிகோ மற்றும் குருணாகல் ஆயர் பேராயர் தி ரைட் ரெவரண்ட் நிஷாந்த பெர்னாண்டோ ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.











