திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்…

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக  தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளின் தாக்கத்தால் 500இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும் மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில் உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள் இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் ம.மலரவன், சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் பிரதிகளை இதன்போது முன்வைத்தார். இத்தகைய ஒளிமூலமான பெருமளவிலான கண் பாதிப்பு சம்பவம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்கள்சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை உடனடியாக அவசர மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொண்டு, கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் வெளிநோயாளர் பிரிவை தொடர்ச்சியாக இயக்கியதுடன், சுற்றுவட்டார மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை ஒருங்கிணைத்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார்.அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என கண், காது, மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் இந்திரநாத் சுட்டிக்காட்டினார். ஒலி தொடர்பான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.மேலும், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் பொதுத் தொல்லை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸாருடன் விரைவான கலந்துரையாடலை நடத்துவதற்கும் அமைச்சர் மற்றும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தனர்.எதிர்காலத்தில் எந்தவொரு திருவிழா அல்லது பொது நிகழ்விலும் பாதுகாப்பை விடக் கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என்றும், மக்களின் உயிர் மற்றும் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாடும் உரிய பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.