நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச…

நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காதைக் கடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனையடுத்து, ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று சுமார் ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என ‘United Human Rights Organization’ அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் எந்தவிதமான மதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.