யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற உற்சவத்தின்போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை நிகழ்வின்போது அதிக சக்தி கொண்ட லேசர் விளக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கண்ணில் பாதிப்புடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் வரவழைக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.












