நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000 மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இ…
நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000 மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கோர விபத்தினால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
நேபாளப் பகுதியில் 734 பேரும், சீனப் பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் உயர்வடையும் ஆற்று நீர்மட்டம் தொடர்ச்சியான மோசமான வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணிகளுக்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன.
இதனிடையே, மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதால், அவற்றின் டி.என்.ஏ மாதிரிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்த பின்னர் நேபாளத்தில் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலக வெப்பமயமாதல் காரணமாகவே இமயமலையில் பனிப்பாறை உறுதியிழந்து இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.












