சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டத்தை கடைபிடிக்கின்ற அரசாங்கம் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு விதிவிலக்களிப்பது ஏன் என இலங்கை தழிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (05) உரையாற்றிய போதே அவ…
சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டத்தை கடைபிடிக்கின்ற அரசாங்கம் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு விதிவிலக்களிப்பது ஏன் என இலங்கை தழிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (05) உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”எமது நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் அரச வங்கியில் சிறிய அளவிலான கடன் பெற்றிருந்தாலும், தவணைகளை காலத்துக்குள் செலுத்தத் தவறினால், 'பாரடே நிறைவேற்று அதிகாரம்' (Parate Execution) உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகள் மூலம் அவரது வீடு, வணிகம், வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் கைப்பற்றப்படுகின்றன.
ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பேரின்ன கடனாளிகளிடமிருந்து அரச வங்கிகளுக்குச் சேர வேண்டிய மக்களின் பணத்தை மீட்டெடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரச வங்கிகளின் பணம் என்பது அரசாங்கத்தின் பணம் மட்டுமல்ல; அது இந்த நாட்டின் மக்களின் சேமிப்புப் பணமாகும். சிறு கடனாளிகள் மீது சட்டம் முழு கடுமையுடன் அமுல்படுத்தப்படும் நிலையில், பெரும் கடன் நிலுவைகளை வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதே சட்டம் ஏன் சமமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை என்பதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்.
அரச வங்கிகள் தவணைக் கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் காரணமாக பாரிய நிதி இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொது நிதியைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச அடமான மற்றும் முதலீட்டு வங்கி ஆகியவற்றின் தற்போது நிலுவையில் உள்ள 20 மிகப்பெரிய தவணைக் கடன் கணக்குகள் மற்றும் கடந்த 15 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 20 மிகப்பெரிய கடன்கள் தொடர்பான முழுமையான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.
ஒவ்வொரு கடன் தொடர்பாக, கடனாளி அல்லது நிறுவனத்தின் பெயர், நிலுவையில் உள்ள அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, கடன் வழங்கப்பட்ட ஆண்டு, வராக் கடனாக (Non-Performing Loan) மாறிய அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட திகதி, வழங்கப்பட்ட பிணை மற்றும் அதன் மதிப்பு, கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதா, மீளப்பெறப்பட்டு வருகிறதா அல்லது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா, இதுவரை மீளப்பெறப்பட்ட தொகை, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், குற்றவியல் விசாரணைகள் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும்.
மேலும், இந்தப் பெரிய கடன் கணக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், இதுவரை மீட்கப்பட்ட தொகைகள் மற்றும் ஒவ்வொரு கணக்கின் தற்போதைய நிலை ஆகியவற்றை விளக்கும் ஒருங்கிணைந்த அறிக்கையை, அல்லது முழுமையான தகவல்களைத் தயாரிக்க கால அவகாசம் தேவைப்படுமானால் குறைந்தபட்சம் மொத்தக் கணக்குகளின் எண்ணிக்கையும் அதனுடன் தொடர்புடைய நிலுவைத் தொகையும் அடங்கிய இடைக்கால அறிக்கையையாவது மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது முன்னெப்போதும் இல்லாத கோரிக்கையல்ல. இதற்கு முன்னரும் பாராளுமன்ற எழுத்துமூல வினாக்கள் மூலம் அரச வங்கிகளில் பெரும் கடன் நிலுவைகளை வைத்திருப்பவர்களின் பெயர்களும், நிலுவைத் தொகைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முழுமையாக அரசுக்குச் சொந்தமான வங்கிகளும் பொது அதிகாரசபைகளாகக் கருதப்படுவதால், இந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு எந்தவித சட்டத் தடையும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
அதேவேளை, கடந்த காலங்களில் அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று, அதே பணத்தை வட்டிக்கு வழங்கி இலாபம் ஈட்டியிருந்தும், அந்தக் கடனை வங்கிக்கு திருப்பிச் செலுத்தாத ஒரு அரசியல்வாதிக்கு எதிராக அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் மறக்க முடியாது.
இவ்வாறான செயல்பாடுகளுக்கு சில அரச வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்..
சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு வேறொரு நீதி என்ற நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது.
அரச வங்கிகளில் இருந்து மக்களின் பணத்தைப் பெற்று, அதை பல ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்டம் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் பணத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; இந்தப் பாராளுமன்றத்தின் பொறுப்பும் ஆகும் என அவர் கூறினார்.












