கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன் விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும், அவ்வாறான அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்ப…

கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன் விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும், அவ்வாறான அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் மற்றும் அவற்றை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பல தசாப்தங்களாக பின்னடையச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டித்வா புயல் காரணமாக மூதூரில் வீடுகளை முழுமையாக இழந்த பயனாளிகளுக்கு, புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்த பின்னர், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் முடங்கிய இலங்கை அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களில் இருந்து மீண்டு, ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இன, மத அல்லது பிரதேச பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தே இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன மற்றும் மத உணர்வுகள் தூண்டிவிடப்பட்டன. இதன் விளைவாக சமூகங்களுக்கிடையில் சந்தேகமும் முரண்பாடுகளும் தோற்றுவிக்கப்பட்டதுடன், அதன் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடியாகப் பிரதிபலித்தது.

நீண்டகாலமாக இடம்பெற்ற மோதல்கள் காரணமாக நாட்டின் மனித வளமும் பொருளாதார வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகளும் பின்னடைவைச் சந்தித்தன.

அரசாங்கத்தை குழப்பும் எதிர்க்கட்சிகள் அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டிய பெருமளவான வளங்கள் மோதல்களை சமாளிப்பதற்காக செலவிடப்பட்டன. இதன் ஒட்டுமொத்த விளைவாக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன.

இவ்வாறான வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்வதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது. குறிப்பாக, தற்போதைய பொருளாதார மீட்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில், இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

அரசாங்கம் தற்போது எந்தவொரு இடைத்தரகரின் ஊடாகவும் அல்லாமல், நேரடியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனினும், நாட்டின் முன்னோக்கிய அபிவிருத்திப் பயணத்தை குழப்பும் நோக்கில் சில தீய சக்திகள் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கி, அதன் ஊடாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி, அதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேசவாதம் போன்ற பிரிவினை அரசியலிலிருந்து நாடு படிப்படியாக விடுபட்டு வருகின்றது. இந்த மாற்றத்தை மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இடமளிக்காது.

கடந்த காலங்களில் இன முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டிராத நிலையில், மீண்டும் அதே பாதையில் செல்வது நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும்.

பொருளாதார நெருக்கடி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மதத்தையோ அல்லது பிரதேசத்தையோ மட்டும் பாதிப்பதில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களே எதிர்கொண்டனர்.

எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. அந்த நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

எனவே, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களிடையே இன, மத மற்றும் பிரதேச அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் என்ற வகையில் எத்தகைய தடைகள் அல்லது சவால்கள் ஏற்பட்டாலும் அபிவிருத்திப் பணிகளை கைவிடப் போவதில்லை. அதேபோன்று இனவாதமும் மதவாதமும் மீண்டும் நாட்டில் துளிர்விடுவதற்கும் அனுமதிக்கப் போவதில்லை.

அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

அரசியல் சிக்கல்கள்அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பான விடயமாகும். ஆனால் அரசியல் இலாபங்களுக்காக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உருவாக்கும் செயற்பாடுகள் நாட்டின் நலனுக்கு எதிரானவை.

கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எத்தகைய சதிகளும் சவால்களும் எதிர்கொண்டாலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தனது அபிவிருத்திப் பயணத்தை கைவிடாது. நாட்டை வளமான நாடாகவும், அனைத்து மக்களுக்கும் கண்ணியமானதும் சிறந்ததுமான வாழ்க்கையை உறுதிப்படுத்தக்கூடிய நாடாகவும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்காகும். அந்த இலக்கை அடையும் வரை எந்தவொரு தடையும் அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14