பாறுக் ஷிஹான் பொலிஸார் வருவதைக் கண்டதும் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து பிற மாடிகளுக்குப் பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்திப் பெண்) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சாய்ந்தமருது பொலிஸார் சினிமா பாணியில் கைது செய…

பாறுக் ஷிஹான்

பொலிஸார் வருவதைக் கண்டதும் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து பிற மாடிகளுக்குப் பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்திப் பெண்) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சாய்ந்தமருது பொலிஸார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.

கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தில் மறைந்திருந்து நீண்டகாலமாக 'ஐஸ்' உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஒரு பிள்ளையின் தாயாரே வயது 40 இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

மாறுவேடத்தில் சென்று வளைத்துப் பிடித்த பொலிஸார்

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை (13) மாலை விசேட அதிரடி சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் வருவதை அறிந்தால் உடனடியாகக் கட்டிட மாடிகளில் லாவகமாகப் பாய்ந்து தப்பி ஓடும் திறமை படைத்த இந்தச் ‘சிலந்தி பெண்ணைச்’ சிக்க வைக்க, பெண் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று சுருக்குப் பொறி வைத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் அச்சந்தேக நபர் பிடிபட்டார்.

கைது செய்யப்பட்டபோது, தொடர்ச்சியாக மாடிகளிலிருந்து குதித்ததால் அவரது கால் உடைந்த நிலையில் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு ‘சிம்ம சொப்பனம்’!

கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் கல்முனைப் பகுதியில் நீண்டகாலமாகப் போதைப்பொருள் நெட்வொர்க்கை நடத்தி வந்துள்ளார். இதற்கு முன்னரும் இருமுறை கைதான இவர், கல்முனை தலைமையகப் பொலிஸாருக்குப் பெரும் சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் இருந்துவந்துள்ளார்.

அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனையில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி வி. பிரகலாதன் தலைமையிலான குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி. ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775), நிவேதன் (94680), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி (10669) உள்ளிட்ட குழுவினர் இந்த விசேட அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

நீண்ட நாட்களாகத் தலைவலி கொடுத்து வந்த போதைப்பொருள் பெண் வியாபாரியைக் கைது செய்த பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணையும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளைச் சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.