இலங்கை சிறைச்சாலைகளில் ஜூலை 5 முதல் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வன்முறைகள் காரணமாக, அதிகப்படியான சிறைக்கைதிகள் நெருக்கடி, பாதுகாப்பு வீழ்ச்சிகள் மற்றும் ஆபத்துமிக்க கைதிகளை நிர்வகித்தல் குறித்த பாரிய கவலைகள் எழுந்துள்ளன. மேலும் பல சம்பவங்களைத் தடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளையும் க…

இலங்கை சிறைச்சாலைகளில் ஜூலை 5 முதல் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வன்முறைகள் காரணமாக, அதிகப்படியான சிறைக்கைதிகள் நெருக்கடி, பாதுகாப்பு வீழ்ச்சிகள் மற்றும் ஆபத்துமிக்க கைதிகளை நிர்வகித்தல் குறித்த பாரிய கவலைகள் எழுந்துள்ளன.

மேலும் பல சம்பவங்களைத் தடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அவசியமான அரசாங்கத் தலையீடுகள் அவசியமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை மற்றும் சிறைச்சாலை கலகங்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, பிரதான திருத்தப் பள்ளிகள் பல பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப்படை, கலகம் அடக்கும் பிரிவுகள் மற்றும் வான்வழி கண்காணிப்புப் பிரிவுகள் ஆகியவை எந்தவொரு அசாதாரண சூழ்நிலையிலும் செயற்படுவதற்காகத் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது ஜூலை 5 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூரமான மோதலின் காரணமாக 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 32 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நெருக்கடி நிலை தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து மஹர மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை பதிவானது. அத்துடன், ஆகஸ்ட் 7 ஆம் திகதி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் பல பேர் காயமடைந்தனர். நேற்று பல்லன்சேனை திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவானதுடன், அங்கு அதிகாரிகளால் பாதுகாப்புப் பணியாளர்கள் நிலைநிறுத்தப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது. சிறை வளாகத்திற்கு வெளியில் இருந்து வீசப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை வெடித்தது. இந்தச் சம்பவத்தினால் சுமார் 40 கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 கைதிகளில் ஒருவர் உயிரிழந்தார். கைதி ஒருவர் தப்பியோட முயற்சித்ததை அடுத்து ஆரம்பித்த இந்த அமைதியின்மை, பின்னர் ஏனைய கைதிகளுடனான மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதிகள் சிறைச்சாலைச் சொத்துக்களை சேதப்படுத்தி செங்கற்களைப் பெற்றுக்கொண்டதாகவும், அவை சிறைச்சாலை அதிகாரிகளுடன் மோதுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டதுடன் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். படுக்கை விரிப்புகளால் செய்யப்பட்ட கயிறுகள் போன்ற தப்பியோடும் திட்டத்துக்கான சான்றுகள் விசாரணைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குருவிட்ட சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, நீர்கொழும்பு தாளுபொத்தையில் உள்ள பல்லன்சேனை திறந்தவெளிச் சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் குழுவொன்று கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலகம் அடக்கும் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவவை அப்பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட சதிவலையே இலங்கையின் சிறைச்சாலை கலகங்களுக்குக் காரணம் என உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு மீளாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கமைய, முக்கிய சிறைச்சாலைகளின் வெளிப் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பூசா, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ, அஙடகுனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில உள்ளிட்ட பிரதான பிராந்திய சிறைச்சாலைகளில் தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவடு அவசர மீளாய்வுகளை மேற்கொண்டதுடன், யாழ்ப்பாணச் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய அல்லது உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தக்கூடிய பொருட்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாதாள உலகக் தலைவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வெலிசரை கடற்படை முகாமில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு மையம் மற்றும் பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலை போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம்; பொறுப்பேற்றது முதல் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 29,000 இலிருந்து கிட்டத்தட்ட 40,000 ஆக அதிகரித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருகிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 5, 2026 நிலவரப்படி அனைத்து சிறைச்சாலைகளிலும் 39,400 கைதிகள் உள்ளனர்; இவர்களில் 28,702 பேர் விசாரணைக் கைதிகளாவர். சிறை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்காக விசேட நட்டஈட்டுத் திட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடை, வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மொனராகலை, பல்லன்சேனை, பூசா, மஹர மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் புதிய உத்தியோகத்தர் தாங்குமிடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்காக ரூ. 46 மில்லியன் ஒதுக்கப்பட்டு, உடல் கேமராக்கள் மற்றும் ரூ. 13.7 மில்லியன் மதிப்பிலான கலகம் அடக்கும் உபகரணங்கள் 150 கலகம் அடக்கும் தலைக்கவசங்கள், 300 துடுப்புகள், 300 கேடயங்கள்) கொள்வனவு செய்யப்படவுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் அதன் மூலக் காரணங்களை ஆராய்ந்து சட்ட, நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக நீதி அமைச்சர் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் முயற்சிகளுடன் இந்தச் சம்பவங்கள் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.