நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க த…

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சொத்து சேதங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதன் அவசியம் குறித்தும் தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சிறைச்சாலைகளில் கைதிகளின் வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவிலான மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை தடுப்பது, ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது, புனர்வாழ்வளிப்பது மற்றும் மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய தேசிய மூலோபாய வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அதிக போதைப்பொருள் அபாயம் காணப்படும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் ஊடாக விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.