செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும் கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமையக்கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமை…

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும் கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமையக்கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (26.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழின படுகொலையின் சாட்சிசெம்மணி சமூக புதைகுழி இலங்கையில் நடந்தேறிய தமிழின படுகொலையின் சாட்சியாகும். ஒவ்வொரு நாளும் அங்கு அகழப்படும் போது எம்மவரின் அவல குரல் மட்டுமல்ல நீதிக்கான குரலும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும் கண்துடைப்பானதாகவோ, மேற்குலக நாடுகளின் அரசியல் நாடகத்தின் ஓர் அங்கமாகவோ, தூது குழுவினரின் சுற்றுலாவாகவோ அமைந்துவிடக்கூடாது.

குழுவினர் கண்ட சாட்சிகள், பெற்றுக்கொண்ட அறிக்கை, மக்களின் நீண்ட கால குரல் என்பவற்றை ஏற்று இலங்கையில் யுத்த குற்றங்களோடு இனப்படுகொலையும் நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கௌரவமாக அமையும்.

இலங்கையில் கடந்த 78 ஆண்டு காலமாக தொடர்ந்த தமிழின அழிப்பு 2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையாக உச்சம் தொட்டது என்பதை சர்வதேசம் அறியும். ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், தற்போதை ஆட்சியிலும் இன அழிப்பு தொடர்கின்றது என்பதுவே உண்மை.

தமிழர்கள் முகம் கொடுத்தது மனித உரிமை மீறல்களுக்கு மட்டுமல்ல. இங்கு நன்கு திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது. இது பிராந்திய அரசியலுக்காகவும், சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கத்திற்காகவும் அவர்களின் ஆயுத மற்றும் வழிகாட்டல் பங்களிப்புடனும் அவர்களின் மேற்பார்வையுடனுமே நிகழ்ந்தன என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாகவே ஐ.நா பொதுச் செயலாளர் பாங்யூ மூன் இலங்கைக்கு வந்தது மட்டுமல்ல. யுத்தம் தொடர்பான கருத்தாடல்கள் ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்றைய நாள் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் மனித உரிமை பேரவையால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் ஆலோசனைகள் என்பவற்றை இலங்கை ஆட்சியாளர்கள் திரும்பியும் பார்க்காத நிலை தொடர்கின்றது. இதனால் இலங்கை அரசு மீதும் ஆட்சியாளர்கள் மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றிய தூத்துக்குழுவினரின் வருகை நிகழ்ந்தது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க செம்மணிக்கு வருகை தந்த போதும் அதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நன்மையும் இதுவரை கிட்டவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாத அரசு முன்னெடுத்த கொடிய யுத்தத்தின் போது யுத்தக்குற்றங்களோடு திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது என்பதற்கு தமிழர் தாயகத்தில் இதுவரை அகழப்பட்டதும் தற்போது அகழப்பட்டு கொண்டிருக்கின்ற செம்மணி சமூக புதைகுழியும் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலையும் போதுமான சாட்சி. சர்வதேச தயவோடு இயங்கும் ஐ.நா மனித உரிமை பேரவை உட்பட அனைத்து அமைப்புகளும் "யுத்தக்குற்றம், இனப்படுகொலை" எனும் சொற்களை வேண்டுமென்றே தவிர்த்து இலங்கை தொடர்பில் கடந்த 17 வருடங்களாக உரையாடல்கள் நிகழ்வதை நாம் அறிவோம். இச்சந்தர்ப்பத்தில் மானிட கௌரவம் கருதியும் தமிழ் மக்களின் எதிர்பார்க்கும் நீதியை முன்னிலைப்படுத்தியும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் யுத்த குற்றங்களோடு, இனப்படுகலையும் நிகழ்ந்தது என்பதை உடனடியாக சர்வதேசத்திற்கு தெரிவித்து இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச வல்லரசுகளின் அரசியல் நலன் சார்ந்தும், பிராந்திய நாடுகளின் நலன் காரணமாகவுமே "யுத்த குற்றம்", "இனப்படுகொலை" எனும் சொற்கள் வேண்டும் என்று தவிர்க்கப்படுவதன் காரணமாக தமிழர்களுக்கான நீதி செயற்பாடுகள் ஐ.நா மனித உரிமை பேரவைக்குள் மட்டும் முடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் அதற்கு சவால் விடுத்து ஐ.நா மனிதர்கள் பேரவைக்கு வெளியில் தமிழர்களுக்கான நீதி செயற்பாடுகள் தொடர வழி திறக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் குரலுக்கு செவிமடுக்காது வல்லரசுகளின் அரசியல் தேவையை கருத்தில் கொண்டு இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை தொடர்ந்தால் தமிழர்கள் தமது நீதிக்கான செயற்பாட்டிற்கு மாற்று வழிகளையும், மாற்று சக்திகளையும் அணுக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதையும் கூற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.