இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்றுள்ளது. ஜனா…

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு - செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நவீனமயமாக்கப்படும் தபால் சேவை

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர். டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார். பொருள்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15 வீத பங்களிக்கும் அந்தச் சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.