அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தனது தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதற்காகக் கணவன் தன்னைத் தாக்கி கழுத்தை நெரித்ததாகக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு புகார் தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், பு…
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தனது தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதற்காகக் கணவன் தன்னைத் தாக்கி கழுத்தை நெரித்ததாகக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு புகார் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில், புதுடெல்லியைச் சேர்ந்த கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர் தன்னை அறைந்ததாகவும், காலால் உதைத்துத் தாக்கியதுடன் கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின்படி, பெண் கத்திய சத்தம் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு, பெண்ணின் குடும்பத்தார் வழங்கும் பொருட்கள் அனைத்தும் பிராண்டட் (Branded) நிறுவனப் பொருட்களாக இருக்க வேண்டும் எனத் தனது கணவனின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தனது தந்தை வரதட்சணையாக சுமார் 20 இலட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கார் மற்றும் 40 இலட்சம் ரூபாய் மதிப்புடைய பிற பொருட்களையும் வழங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
புது டெல்லியில் உள்ள தனது கணவன் வீட்டிற்குச் சென்ற அவர், வரதட்சணை விவகாரத்திற்காகத் தனது மாமியார் மற்றும் நாத்தனார் தன்னைத் தொடர்ந்து கேலி செய்து அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை 4 அன்று தேனிலவுக்காகத் தம்பதியினர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணத்தின்போது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும், அதனால் கடுமையான வயிற்றுவலியும் அதிகப்படியான இரத்தப்போக்கும் ஏற்பட்டதாகவும் அப்பெண் கூறினார்.
இதைக் கண்டு கோபமடைந்த மிஸ்ரா, தனக்கு ஏன் முன்பே மாதவிடாய் பற்றித் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தன் "மனநிலையைக் கெடுத்துவிட்டதாக"க் கூறித் தன்னைத் தாக்கியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது தந்தையை டெல்லிக்கு அழைத்து அழைத்துச் செல்லுமாறு மிஸ்ரா தொலைபேசியில் அழைத்துக் கூறியதாகவும், இவருடன் வாழ விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லிக்குத் திரும்பியதும் நடந்த தாக்குதல் குறித்துத் தனது மாமியார் மற்றும் நாச்சியாரிடம் கூறியதாகவும், ஆனால் அவர்கள் தமக்கு மன உளைச்சலை மட்டுமே தந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து ஓகஸ்ட் 15 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












