தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்து வயது முதிர்ந்த பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுவாக ஒட்டகச்சிவிங்கிகள் வனப்பகுதிகளில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. முறையான பராமரி…

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்து வயது முதிர்ந்த பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒட்டகச்சிவிங்கிகள் வனப்பகுதிகளில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. முறையான பராமரிப்பு வழங்கப்படும் உயிரியல் பூங்கா சூழலில் அதைவிட அதிக காலம் வாழக்கூடிய நிலையில், உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கி சுமார் 30 ஆண்டுகள் வாழ்ந்ததாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விலங்குகளுக்கு வேட்டையாடும் உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு, சுத்தமான மற்றும் பொருத்தமான வாழ்விடம், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான கால்நடை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் காரணமாகவே இந்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட காலம் வாழ முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விலங்குகள் நலன், மரபணு பல்வகைமை மற்றும் விலங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு முடிவதற்குள் இரண்டு ஜோடி புதிய ஒட்டகச்சிவிங்கிகளை தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டகச்சிவிங்கிகளை காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, எதிர்காலத்தில் புதிய ஒட்டகச்சிவிங்கிகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.