அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் "குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சிக்கான அதிகச் செலவு மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க த…
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் "குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சிக்கான அதிகச் செலவு மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென்கொரியா மறுத்தமை ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கூட்டுப் பயிற்சிகள் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்தப் பயிற்சிகளை முழுமையாக ரத்து செய்ய முடியாத நிலை உள்ளபோதிலும், இதில் அமெரிக்கா பங்கேற்பது குறித்துத் தாம் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தனக்கு உள்ள "மிகச் சிறந்த உறவை" அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்தப் பயிற்சிகள் வடகொரியாவிற்குத் தேவையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்' பயிற்சியில் சுமார் 18,000 தென்கொரிய இராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் கணினி அடிப்படையிலான உருவகப்படுத்துதல் மூலம் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது. பயிற்சிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும், டிரம்ப்பின் கருத்துக்கள் குறித்து உடனடி விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. தென்கொரியாவுடனான இராணுவப் பயிற்சிக் குறைப்பிற்கு வடகொரியாவுடனான ராஜதந்திர உறவு மட்டுமல்லாது, ஈரானின் அணுஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைய தென்கொரியா மறுத்ததும் ஒரு காரணம் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்து வரும் வேளையிலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலிலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.












