திபெத்தில் அணை ஒன்று உடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேபாளம் தனது உயரமான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இன்று (28) எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத் பகுதியில் மீண்டும் நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவி…

திபெத்தில் அணை ஒன்று உடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேபாளம் தனது உயரமான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இன்று (28) எச்சரிக்கை விடுத்துள்ளது.

திபெத் பகுதியில் மீண்டும் நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு, பனிப்பாறை சரிவால் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெருமளவிலான பனி மற்றும் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே, புதிய வெள்ள அபாயம் காரணமாக திபெத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீனா மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான குப்பைக் குவியல்கள் காரணமாக உருவான நீர்த்தேக்கம் தற்போது உடைந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் ஜியிரோங் எல்லைப் பகுதியை நோக்கி நீர் மற்றும் சேறு பெருக்கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த ஆறுகளின் கரையோரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆபத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.