“தூய்மையான தீவுகள்” திட்டம்: பசுமை முத்திரையுடன் உலகச் சந்தையை நோக்கி மூன்று தீவுகளுக்கும் புதிய வாய்ப்பு – வலுசக்தி அமைச்சின் செயலாளர் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந…
“தூய்மையான தீவுகள்” திட்டம்: பசுமை முத்திரையுடன் உலகச் சந்தையை நோக்கி மூன்று தீவுகளுக்கும் புதிய வாய்ப்பு – வலுசக்தி அமைச்சின் செயலாளர்
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்று (14.08.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வலுசக்தி அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு அவர்கள் கலந்து கொண்டு - இத் திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், தூய்மையான தீவுகள் (Clean Islands) திட்டத்தின் ஊடாக நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு உள்ளிட்ட மூன்று தீவுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டீசல் அடிப்படையிலான மின்சார உற்பத்தியில் இருந்து புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான ஆற்றலை நோக்கி தீவுகளை மாற்றுவதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார். இத் திட்டம் வெறுமனே மின்சார உற்பத்தித் திட்டமாக மட்டுப்படுத்தப்படாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு, உள்ளூர் உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் மக்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நீண்டகால அபிவிருத்தித் திட்டமாக அமையும் எனவும் தெரிவித்தார். கற்றாழை, மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட உள்ளூர் வளங்களுக்கு பெறுமதி சேர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உற்பத்தி செய்து “பசுமை முத்திரை” (Green Label) மூலம் ஏற்றுமதி சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக தெரிவித்தார்.மேலும், அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்படும் “4P” அணுகுமுறையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், உள்ளூர் மக்களின் அறிவும் அனுபவமும், பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்பும் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு (Net Zero) இலக்கை நோக்கி நகர்த்தும் தேசிய முயற்சிகளுடன் இணைந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு மூன்று தீவுகளின் எதிர்கால சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சியை மாற்றியமைக்கும் நீண்டகாலத் திட்டமாக “தூய்மையான தீவுகள்” திட்டம் அமையும் எனவும் மேலும் தெரிவித்தார்.












