உயர்தரப் பரீட்சைகள் திங்கட்கிழமை (10 ஆம் திகதி) ஆரம்பமானதுடன், பரீட்சை தொடர்பில் எத்தகைய ஒழுங்கீனங்களிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் விசாரணைகளுக…

உயர்தரப் பரீட்சைகள் திங்கட்கிழமை (10 ஆம் திகதி) ஆரம்பமானதுடன், பரீட்சை தொடர்பில் எத்தகைய ஒழுங்கீனங்களிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே   வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் விசாரணைகளுக்குப் பின்னர் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம் எனப் பாடசாலைகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களத்தில்   திங்கட்கிழமை (10 ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பரீட்சை மண்டபத்திற்குச் கைபேசிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் குறிப்புகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேனா, பென்சில், அழிப்பான் (Eraser), அடிமட்டம் (Ruler) போன்றவற்றை மாத்திரம் எடுத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்தால், இந்த ஆண்டு முடிவடைவதற்குள் பெறுபேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்ட பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல், கடந்த தரம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேடுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையானது 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதுடன், இதில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதிப்பெற்றிருந்தனர்.