நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வைக்கோலை எரிப்பதால் காற்று மாசுபாடு அதிகர…

நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வைக்கோலை எரிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிப்பதுடன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து மண்வளம் சீரழிகிறது. மேலும், வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால் மனித–யானை மோதல்களும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு மாற்றாக, வைக்கோலை உருளைகளாக கட்டி கால்நடைப் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தல், ‘ஹேப்பி சீடர்’ (Happy Seeder) போன்ற நவீன கருவிகள் மூலம் வைக்கோலை இயற்கை உரமாக மாற்றுதல் மற்றும் வறட்சி காலத்திற்காக வைக்கோல் சேமிப்பு மையங்களை அமைத்தல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மண்வள பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விவசாயத் திணைக்களம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், புகை மாசு ஏற்படுத்துவோருக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கைகளும் அபராதங்களும் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம மட்டத்தில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, கமநல சேவை மையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு மாற்று வழிமுறைகள் குறித்து வழிகாட்டும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

வைக்கோல் எரிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், அதனுடன் அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆதரவும் விவசாயிகளின் ஒத்துழைப்பும் இணைந்தாலே நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.