நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 4.0…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதுமான அளவு நீரை அருந்துவதுடன், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துமாறும், வாகனங்களுக்குள் சிறுவர்களை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வரலாற்று வெப்பநிலை சாதனையை நெருங்கும் இலங்கை

இலங்கையில் அண்மைக்காலமாக வெப்பநிலை வரலாற்று உச்சத்தை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.1°C ஆகும். 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

எனினும், அண்மையில் பொத்துவில் பகுதியில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இது வரலாற்று அதிகபட்ச வெப்பநிலையை விட 0.2°C மட்டுமே குறைவாகும். பொலன்னறுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெப்பநிலை 37°C-ஐ கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வெப்பநிலை 40°C-க்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் 1983 ஆம் ஆண்டு பதிவான அதிகபட்ச வெப்பநிலை முறியடிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறட்சிக்குப் பின்னர் அதிக மழைக்கான சாத்தியம்

இதனிடையே, ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழமையை விட குறைவான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பகுதிகளில் வழமையான மழைவீழ்ச்சி காணப்படக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒக்டோபர் மாதத்திற்குள் நிலைமை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் இலங்கை எதிர்காலத்தில் வறட்சியையா அல்லது வெள்ளப்பெருக்கையா எதிர்கொள்ளும் என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது எனவும், மாறிவரும் காலநிலை காரணமாக வெவ்வேறு காலகட்டங்களில் வறட்சியும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல் நினோ தாக்கத்தால் 81,865 பேர் பாதிப்பு

இதேவேளை, எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் 23 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,628 குடும்பங்களின் 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவான குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு 7 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10,264 குடும்பங்களின் 33,023 பேருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களின் 7,882 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.