வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்று வருமானம் ஈட்டி, தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இளைஞர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட…
வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்று வருமானம் ஈட்டி, தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இளைஞர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் ஊடாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்று (6) கொழும்பு பொல்துவ சந்தியில் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இடையில் 2023 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் 14,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், தற்போதைய நிலையில் இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக அரசாங்கத்தின் ஊடாக அனுப்பப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, பெரும்பாலானோர் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக அனுப்பப்படுவதாகவும், இது தொடர்பில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் ஊடாக இஸ்ரேல் செல்லும் ஒருவருக்கு சுமார் 4 இலட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக செல்லும் ஒருவருக்கு சுமார் 45 இலட்சம் ரூபாய் வரை செலவாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஊழியரை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சுமார் 5,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைப்பதாகவும், இஸ்ரேலுக்குச் செல்ல தகுதி பெற்ற 3,500 பேர் தற்போது காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அதிக செலவுகளை தவிர்த்து, குறைந்த செலவில் இளைஞர்கள் இஸ்ரேலுக்கு செல்லும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து, 2023 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய அரசாங்கத்தின் ஊடாக 70 வீதமும், தனியார் நிறுவனங்கள் ஊடாக 30 வீதமும் வேலைவாய்ப்பாளர்களை அனுப்பும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இளைஞர்களின் கனவுகளை பாதுகாப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அதிகளவிலான பணத்தை செலுத்த வேண்டிய நிலையை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.












