எஸ்.கௌசல்யா விமானப் பொதியை படங்களாகக் காட்டி அப்பாவி மக்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஈஸி கேஸ் முறையிலிருந்து வங்கிக்கு பணத்தை வைப்பிலிடுதல் வரையிலும் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான சம…

எஸ்.கௌசல்யா

விமானப் பொதியை படங்களாகக் காட்டி அப்பாவி மக்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஈஸி கேஸ் முறையிலிருந்து வங்கிக்கு பணத்தை வைப்பிலிடுதல் வரையிலும் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான சம்பவமொன்று தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில், சனிக்கிழமை (22) அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்த அந்த பெண், தனது கணவனுக்குத் தெரியாமல் தாலிக்கொடியை அடகுவைத்து, பணத்தை வைப்பிலிட்டுள்ளார். அதற்கு பின்னர், பரிசு தருவதாக கூறியவரின் அலைபேசி வேலையே செய்யவில்லை.

வாகர்களே, அந்த பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு இப்படியான குறுஞ்செய்திதான் ஆங்கிலத்தில் வந்துள்ளது.

"உங்கள் வீட்டு முகவரிக்கு வெளிநாட்டில் இருந்து பொதி (Luggage) வந்துள்ளது; சுங்கக் கட்டணமாக 150,000 ரூபாவைச் செலுத்த வேண்டும்", "பொதிக்குள் வெளிநாட்டு டொலர்கள் உள்ளன; ஐ.எம்.எஃப் (I.M.F) சான்றிதழ் பெற மேலும் 387,500 ரூபாய் செலுத்த வேண்டும்" -

இது போன்ற குறுஞ்செய்திகளோ அல்லது தொலைபேசி அழைப்புகளோ உங்களுக்கு வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்! இது இணைய மோசடி நபர்களின் (Online Scammers) மற்றுமொரு புதிய முகமூடியாகும்.

பேராசையே மோசடிக்காரர்களின் மூலதனம்

இது போன்ற பொய்களை நம்பி ஏமாறும் அப்பாவி மக்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன. சமீபத்தில் இதுபோன்ற ஒரு குறுஞ்செய்தியை நம்பிய தாய் ஒருவர், வரவிருக்கும் பரிசுத்தொகை அல்லது பொதி மீதுள்ள பேராசையால், தனது தாலிக்கொடியையும் கணவருக்குத் தெரியாமல் அடகுவைத்து மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளார். இறுதியில் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்.

சிந்திக்க வேண்டிய சில முக்கியமான கேள்விகள்:

விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? எந்தவொரு விமான நிலையத்திலும் பொதிகள் ஸ்கேன் செய்யப்படும்போது, விதிகளின்படி உரிமையாளர் முன்னிலையில்தான் சோதனைகள் நடைபெறும். ஸ்கேன் இயந்திரங்கள் மூலம் பொதிக்குள் என்ன இருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்க முடியுமே தவிர, விமானத்தில் உள்ள பொதியை ரகசியமாகப் படம் பிடிக்கவோ அல்லது உரியவரின் ஒப்புதல் இல்லாமல் வெளியே அனுப்பவோ முடியாது. உங்களுக்கே தெரியாத பொதிக்கு ஏன் கட்டணம்? நீங்கள் எங்குமே எதையும் ஆர்டர் செய்யாமல், உங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு பொதிக்காக நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? பரிசுத் தொகையில் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளலாமே? உங்களுக்கு வரும் பரிசுப் பணத்தையோ அல்லது வெளிநாட்டு டொலர்களையோ தருவதாகக் கூறுபவர்கள், ஏன் சுங்கக் கட்டணத்தை அந்தப் பணத்திலிருந்தே கழித்துவிட்டு மீதத்தைத் தரக்கூடாது? மாறாக, உங்களை எதற்காகத் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பச் சொல்கிறார்கள்? இதிலிருந்தே இதுவொரு வெளிப்படையான ஏமாற்று வேலை என்பது தெளிவாகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை!

தனிநபர் கணக்குகளுக்குப் பணம் அனுப்ப வேண்டாம்: சுங்கத் திணைக்களம் (Customs) எப்போதுமே தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைச் செலுத்தக் கோராது. அரசு முறைப்படியான கட்டணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் மூலமாகப் பெறப்படும். தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்: உங்களது தொலைபேசி இலக்கத்தை யார் வேண்டுமானாலும் சமூக வலைத்தளம் மூலம் பெறலாம். எனவே, இது போன்ற தேவையற்ற குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிப்பதையோ அல்லது  நம்புவதையோ முற்றிலுமாகத் தவிர்க்கவும். விளக்கத்துடன் இருங்கள்: விமான நிலையங்களின் செயற்பாடுகள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நடைமுறைகள் பற்றிப் போதிய விழிப்புணர்வுடன் இருங்கள். இல்லையெனில், உங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை ஒரு விநாடியில் இழக்க நேரிடும்.

அதிகமான ஆசை பெருநஷ்டத்தில் முடியும். எப்போதுமே விழிப்புணர்வுடன் இருந்து, இது போன்ற மோசடி வலைகளில் சிக்காமல் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!