அமெரிக்கன் எயர்லைன்ஸுக்கு (American Airlines) சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அட்லாண்டாவிலிருந்து டெக்சாஸ் நோக்கிப் பறந்துகொண்டிருந்தபோது, அதனுள் இருந்த மடிக்கணினி (Laptop) திடீரென தீப்பற்றியதில் 5 பயணிகள் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஜோர்ஜியா மாநிலம் அட்லாண்டாவில் இருந்து டெக…
அமெரிக்கன் எயர்லைன்ஸுக்கு (American Airlines) சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அட்லாண்டாவிலிருந்து டெக்சாஸ் நோக்கிப் பறந்துகொண்டிருந்தபோது, அதனுள் இருந்த மடிக்கணினி (Laptop) திடீரென தீப்பற்றியதில் 5 பயணிகள் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
ஜோர்ஜியா மாநிலம் அட்லாண்டாவில் இருந்து டெக்சாஸின் டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் (Dallas Fort Worth) சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த குறித்த விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, விமானத்தின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியொன்றே இவ்வாறு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவத்தின் போது விமானத்தில் 133 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
"விமானப் பணியாளர்கள் தற்போது அதனை அணைக்க முயன்றுவருகிறார்கள்."
"மடிக்கணினி தீப்பற்றியதில் நான்கு முதல் ஐந்து பயணிகள் வரை தீக்காயமடைந்திருக்கலாம் என நினைக்கிறேன்" என்று சம்பவத்தின் போது பயணிகள் தெரிவித்தனர்.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன், பயணிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவசரகால மீட்புப் பணியாளர்கள் தரையில் காத்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சிபிஎஸ் (CBS) ஊடகம் தெரிவிக்கையில், அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:
"அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் 2398, தரையிறங்கும் போது வாடிக்கையாளர் ஒருவரின் சாதனத்திலிருந்து புகை வெளியேறியதாக வந்த தகவலை அடுத்து டி.எஃப்.டபிள்யூ (DFW) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது."
"சாதனத்தை விரைவாகக் கட்டுப்படுத்துவதில் காட்டிய தொழில்சார் ஈடுபாடு மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக நமது விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்."
விமானங்களில் மடிக்கணினி மற்றும் தொலைபேசிகளின் லியத்தியம் (Lithium) மின்கலங்கள் "வெப்ப ஓட்டம்" (Thermal runaway) காரணமாக ஆபத்தான முறையில் அதிக வெப்பமடையும் அபாயம் உள்ளதாக ஃபெடரல் வான் போக்குவரத்து நிர்வாகம் (FAA) எச்சரித்துள்ளது.
அவை மேலும் தெரிவிக்கையில்: "மின்கலங்கள் சேதமடைதல், அதிக வெப்பமடைதல், நீரில் நனைதல், அதிகப்படியான சார்ஜ் ஏறுதல் அல்லது முறையற்ற முறையில் பேக் செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எச்சரிக்கையின்றி வெப்ப ஓட்டம் ஏற்படலாம்" எனக் குறிப்பிட்டுள்ளன.
இந்த அபாயங்கள் காரணமாகவே விமானங்களில் லியத்தியம் மின்கலங்களுக்கான அளவு எல்லைகள் (Size limits) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எஃப்.ஏ.ஏ (FAA) தரவுகளின்படி, நடப்பாண்டில் விமானங்களில் புகை, தீ அல்லது அதிக வெப்பமடைதல் தொடர்பான குறைந்தது 56 லியத்தியம் மின்கலச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விமான மோதல் அபாயம் நூலிழையில் தவிர்ப்பு
இதற்கிடையில், அமெரிக்கன் எயர்லைன்ஸின் இரண்டு விமானங்கள் ஒரே மாதிரியான விமான எண்களுடன் (Flight numbers) அறியாமல் பறந்ததன் காரணமாக, நடுவானில் மோதிக் கொள்ளும் அபாயம் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தவறின் காரணமாக இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பாதையில் பயணித்துள்ளன. விழிப்புடன் செயற்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் இந்தத் தவையைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
தி சன் (The Sun) ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில் அமெரிக்கன் எயர்லைன்ஸ் தெரிவிக்கையில்:
"ஆகஸ்ட் 14ஆம் திகதி நள்ளிரவு மணியளவில் ஃபீனிக்ஸ் (PHX) நகருக்கு அருகில் ஒரே அழைப்புக் குறியைக் (Call sign) கொண்ட இரண்டு அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம்."
"விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் எமது விமானிகளின் விடாமுயற்சி மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் ஆகியவை அவசியமான இடைவெளியைப் பேண உறுதிசெய்ததுடன், சிக்கல் அடையாளம் காணப்பட்டு உடனுக்குடன் சரிசெய்யப்பட்டது."
"இரண்டு விமானங்களும் பாதுகாப்பாகவும் எந்தவிதச் சம்பவங்களும் இன்றியும் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












