மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி…

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,அரசின் நோக்கம் கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்பது எம்மை பொறுத்தவரையில் எட்டாக்கனியாகவே இருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் எமது மக்களுக்கு அரிதாகவே இருந்தன.

இந்த நிலைமையை ஆழமாக ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தை கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாக வைத்திருக்காமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை சென்றடையும் வகையில் மாற்றியமைத்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே இன்று எமது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாகவும், எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு முக்கியமான வெளிப்பாடாகவே இன்று இங்கு கூடியிருக்கும் எமது மாணவச் செல்வங்களான மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த நிகழ்வையும் நாம் பார்க்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். உலகை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும் அவர்களிடம் உள்ளது.சமூகத்தில் சம உரிமைஇதற்கு சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிடலாம்.

உடல் ரீதியான பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அறிவாற்றலால் உலக விஞ்ஞானத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி, அழியாத தடம் பதித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் சம வாய்ப்புகளையும் தேவையான வளங்களையும் வழங்கி, அவர்களும் சமூகத்தில் சம உரிமையுடன் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம்.

‘மாற்றுத்திறனாளி’ என்ற அடையாளம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் சம வாய்ப்புகளும் கிடைக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எதிர்காலத்திலும் இதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும், கடந்த காலங்களை விட இன்று மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவமும் குரலும் வலுப்பெற்று வருகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆற்றலுடன் இந்த நிகழ்வில் உரையாற்றி, பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து வருவதை குறிப்பிடலாம்.வெற்றிப் பயணம் இதுபோன்ற மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம், சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள் என்றால், இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் காரணமாக உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியவர்களும் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், யாரும் மனம் தளராமல் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். உங்களின் வெற்றிப் பயணத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது. ஏழை, பணக்காரர்,சாதி,மதம் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் சமமான மனிதர்கள் எனவும், மாற்றுத்திறன் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.