எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெள…

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. சர்வதேச மாநாடு

இந்த மாநாடு தொடர்பாகவும், மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கு ஆதரவு கோரும் வகையிலும் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முக்கியமான சில விடயங்கள் மற்றும் மாநாடு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டன.

அதேபோன்று, மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன், மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.தாய்மார்களின் வலி இந்த சர்வதேச மாநாடு, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்துள்ள தாய்மார்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்களுக்கு நேர்ந்தது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அனைத்துச் சமூகங்களும் பங்கேற்று, தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் மாநாடாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நிலையில், 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.

அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து, 'அழிக்கப்பட்ட சாட்சியங்கள்' என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் போராட்டங்களின்போது கையளிக்கப்பட்ட அறிக்கைகளைப் புத்தக வடிவிலும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.தமிழ் தேசியம் அதேபோன்று, மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் குழு கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச ரீதியிலும், வடக்கு–கிழக்கு சார்ந்த ரீதியிலும், தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கும் அநீதிக்கும் நீதி பெற்றுக்கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.