பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (22.08.2026) வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ…

பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (22.08.2026) வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரமான கல்விச் சூழல்அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின் நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது. இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்தத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.அதுமட்டுமன்றி, மேலும் 03 விடுதிகள் இந்தத்திட்டத்தின் மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் போது, புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம்.

அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம்.விடுதி வழங்கும் திட்டம்இந்தத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும் தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு 4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இந்தத்திட்டத்தின் மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடம்

அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள் என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.ஷ