சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள் காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(5) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வ…

சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள் காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(5) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,2.5 மில்லியன் டொலர் "அரசு சுட்டிக்காட்டியுள்ள தொழில்சார் அறிக்கையின்படி, 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமையானது ஒரு சைபர் குற்றம் மாத்திரமன்றி, அது நிர்வாக மற்றும் நிறுவனச் செயற்பாட்டு நடைமுறைப் பிரச்சினையுமாகும். இந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் செலுத்தும் பொறிமுறையில் பலவீனமான நிர்வாகமே காணப்படுவதாகக் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வங்குரோத்தான நமது நாட்டில் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, வாழ்க்கைச் சுமை, வறுமை மற்றும் வேலையின்மை என்பவற்றை அதிகரித்துத் தொழில்துறைகளை வீழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், 25 இலட்சம் டொலர்களைக் கூடச் செலுத்த முடியாத அரசே ஆட்சியில் உள்ளது.

கடன் மீளச் செலுத்தும் நடவடிக்கை முன்னர் மத்திய வங்கியின் மையமாக இருந்த போதிலும், புதிய சட்டத்தின் ஊடாக அது கடன் செலுத்தும் அலுவலகத்துக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது.எனினும், இந்தக் காலகட்டத்தில் தேவையான இடைக்கால ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அரசுக்கு இயலாமல் போயுள்ளது.

இது வெறும் சைபர் தாக்குதல் மட்டுமல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பில் திறைசேரியும் மத்திய வங்கியின் ஆளுநரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.பொருளாதாரத்தின் நிலைஇவ்விரு முக்கிய நிறுவனங்களும் ஒரே நேர்கோட்டில் நின்று செயற்படத் தவறினால் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்னவாகும்?

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படாமை ஆகியவற்றின் காரணமாகவே சைபர் பாதுகாப்பு ஆபத்து உருவாகியுள்ளது. போலி மின்னஞ்சல் டொமைன்களின் பயன்பாடு இதற்கு மூலக் காரணமாக இருந்தபோதிலும், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிந்துரைகள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன் ஒப்பந்தங்களைப் பரிசோதித்தல், தொடர்பு வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களைச் சரிபார்த்தல் என்பன முறையாக இடம்பெறவில்லை. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கியுடன் தொடர்புடைய செலுத்துகையின் போதும் இவ்வாறான சந்தேகத்துக்கிடமான பிரச்சினை உருவான போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தச் சம்பவங்கள் நாட்டின் கடன் செலுத்தும் செயற்பாடுகள் குறித்த நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றன.பங்களாதேஷ், ஈக்வடார், வியட்நாம், இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளதைப் போன்று இலங்கையும் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லையற்ற வரிச்சுமை

நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பொறி சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த இலக்குகளையும் தாண்டி அதிகளவில் வரி விதிப்பதாகும். முதன்மை மீதியை 2.3 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் வரை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் கையாள்களாக அரசு மாறியுள்ளது. எதிர்க்கட்சியில் இருந்தபோது பாட்டாளி வர்க்கம் பற்றிப் பேசியவர்கள், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பொம்மைகளாக மாறியுள்ளதால் நாட்டின் வாழ்க்கைச் சுமையோ பணவீக்கமோ குறையவில்லை.

மாதமொன்றுக்கு 17 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வாழ முடியும் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுவது தவறான தரவாகும்.இவ்வாறான பொய்த் தரவுகளின் அடிப்படையில் செயற்படும் அரசிடம் வறுமையை ஒழிப்பதற்கான எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை நாசமாக்குவதுடன், எரிபொருள் மாபியாவைப் பாதுகாப்பதற்காகச் சூரிய சக்தி மின் உற்பத்தியையும் அரசு பலவீனப்படுத்தி வருகின்றது.

இவ்வாறான எல்லையற்ற வரிச்சுமையால் பிறக்காத குழந்தை முதல் கர்ப்பிணித் தாய்மார் வரை அனைத்துப் பிரஜைகளும் கடும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். அரசு வாக்குறுதியளித்த 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற நோக்கத்தை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தின் வரி இலக்குகளைத் தாண்டி மேலதிக வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.