இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். மேலும் தமிழர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை முழுமையாக அமல்பட…

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். மேலும் தமிழர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை முழுமையாக அமல்படுத்துமாறு மேலும் கோரியுள்ளார். இந்த விடயங்களை இலங்கை அரசுத் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.விக்ரம் மிஸ்ரியின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் உதவி, எரிசக்தித் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம், திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது, மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்து நவீனமயமாக்குவது போன்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் இருதரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு விவாதமும் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதேவேளை, போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை இலங்கை நாடியதாகவும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சவால்களை சமாளிப்பதில் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 முதல் 2019 காலப்பகுதிக்குள் முடிவடைந்த போதிலும், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தேர்தல்களை நடத்தாமல் ஒத்திவைத்து வந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.