இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அ…
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்புகளின் போது, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக அமல்படுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் துறைக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், குறிப்பாக 2017 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்திற்காக அறிவிக்கப்பட்ட 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை மேலும் விரைவுபடுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்டகாலமாக நீடித்து வரும் இந்திய–இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் இருதரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவாக விடுவிப்பதற்கான ஒத்துழைப்பை கோரிய அவர், வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்ட மனிதாபிமான அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2024 டிசம்பரில் வழங்கியிருந்த உறுதிமொழியை விக்ரம் மிஸ்ரி வரவேற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உறுதிப்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் விரிவான அபிவிருத்திப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அடித்தளமாக அமையும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2024 டிசம்பர் இந்திய விஜயத்தின் போது உருவாக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 2025 ஏப்ரல் இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த உத்தியோகபூர்வ விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







-558477_850x460.jpg)
-558498_850x460.jpg)


-558522_850x460.jpg)
