காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும் அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்…
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும் அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு வருகின்றது.
அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும்.
உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.
57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார,
எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே நடைமுறைப்படுத்தப்படும்.
அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த எதிர்பார்ப்பிலாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப் பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000 முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.












